விளைவுகளும் உடனுரையும்
Results and discussion
அறிவியலில் மிகப்பெரும் எண்களும் மிகச்சிறு எண்களும் எழுகின்றன. எடுத்துக்காட்டாக புவியிலிருந்து கதிரவனின் தொலைவு 149,597,870,700 மீட்டர். கரிம அணுவின் (சகதிறன்) விட்டம் 140 x 10-12 மீட்டர். இதுபோன்ற எண்களைப் பற்றிப் பேசுவதற்கும் வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் தேவையான தமிழ்ச் சொற்களை நம் முன்னோர் ஆக்கி வைத்திருக்கவில்லை. அவர்களுக்குத் தேவையான எண்கள் ஆயிரத்துக்கு மிகாமலும் மாகாணிக்குக் குறையாமலும் இருந்தன போலும். பிற்காலத்தில் இலச்சம், கோடி என்ற சொற்கள் வேறு மொழிகளிலிருந்து வந்து தங்கிவிட்டதாகக் காண்கிறது. மிகப் பெரிய எண்களையும் மிகச் சிறிய எண்களையும் குறிப்பதற்கு அறிவியலாளர் அறிவியல் குறியீடு என்ற முறையைப் பயன்படுத்துகின்றனர். இம்முறையில் இலக்கங்களை மூன்று மூன்றாகத் தொகுத்து எழுதுவது வழக்கம்; அதாவது ஆயிரத்தின் அடுக்குகளாகத் தொகுப்பது வழக்கம். இந்த அடுக்குகளுக்கு மெட்டிரிக முறையில் கிலோ-, மெகா-, மில்லி-, மைக்குரோ- போன்ற முன்னொட்டுகள் உள்ளன. ஆயிரத்தின் அடுக்குகளைப் பெயரிடுவதற்கான சொற்களை ஆக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இதற்காக நான் முன்மொழியும் முறையை அட்டவணை 1 காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, ஐமடியாயிரம் என்பது ஆயிரத்தின் ஐந்தாவது அடுக்கு. இலச்சம், கோடி என்பவை ஆயிரத்தின் அடுக்குகள் அல்லாததால் அவற்றை அறிவியலில் பயன்படுத்த வேண்டாம். இம்முறையில் கதிரவனின் தொலைவைச் சொற்களால் வாசிக்க நூற்றுநாற்பத்தொன்பது மும்மடியாயிரத்து ஐநூற்றுத்தொண்ணூற்றேழு இருமடியாயிரத்து எண்ணூற்றெழுபது ஆயிரத்து எழுநூறு மீட்டர் எனலாம். எண்களைச் சொற்களால் எழுதும்போது இடையே காற்புள்ளி வைக்கவேண்டாம்.
எண் | பெயர் | Short scale English names |
---|---|---|
103 | ஆயிரம் | thousand |
106 | இருமடியாயிரம் | million |
109 | மும்மடியாயிரம் | billion |
1012 | நான்மடியாயிரம் | trillion |
1015 | ஐமடியாயிரம் | quarillion |
1018 | அறுமடியாயிரம் | quintillion |
1021 | எழுமடியாயிரம் | sextillion |
1024 | எண்மடியாயிரம் | septillion |
1027 | ஒன்பதுமடியாயிரம் | octillion |
1030 | பதின்மடியாயிரம் | nonillion |
1033 | பதினொருமடியாயிரம் | decillion |
1036 | பன்னிருமடியாயிரம் | undecillion |
1039 | பதின்மும்மடியாயிரம் | duodecillion |
1042 | பதிநான்மடியாயிரம் | tredecillion |
1045 | பதினைமடியாயிரம் | quattuordecillion |
1048 | பதினறுமடியாயிரம் | quindecillion |
1051 | பதினெழுமடியாயிரம் | sexdecillion |
1054 | பதினெண்மடியாயிரம் | septendecillion |
1057 | பத்தொன்பதுமடியாயிரம் | octodecillion |
1060 | இருபதின்மடியாயிரம் | novemdecillion |
1063 | இருபத்தொருமடியாயிரம் | vigintillion |
10300 | நூறுமடியாயிரம் | |
10303 | நூற்றொருமடியாயிரம் | centillion |
அட்டவணை 1 பெரிய எண்களின் பெயர்கள்
Very large and very small numbers arise in science. For example, the distance of the sun from the earth is 149,597,870,700 meter. The (covalent) diameter of carbon atom is 140 x 10-12 meter. Our ancestors did not create Tamil words needed for speaking, writing, and reading about these numbers. Apparently the numbers they needed did not exceed thousand and did not diminish below one sixteenth. The words lakh and crore seem to have settled from other languages at a later period. Scientists use a method called the scientific notation to denote very large and very small numbers. In this method, it is customary to group digits three by three; that is, to group them in powers of thousand. There are prefixes such as kilo-, mega-, milli-, and micro- in the metric system for these powers. We are in a position of having to create words for the powers of thousand. அட்டவணை 1 shows the method I propose for this purpose. For example, ஐமடியாயிரம் is the fifth power of thousand. Since lakh and crore are not powers of thousand, let us not use them in science. In this method we can say that the distance to the sun is நூற்றுநாற்பத்தொன்பது மும்மடியாயிரத்து ஐநூற்றுத்தொண்ணூற்றேழு இருமடியாயிரத்து எண்ணூற்றெழுபது ஆயிரத்து எழுநூறு meter. Let us not use commas in the middle of numbers written in words.
அட்டவணையில் தமிழ்ப் பெயர்களுக்கும் ஆங்கிலப் பெயர்களுக்கும் இடையே உள்ள ஓர் இயைபின்மை தெளிவாகத் தெரிகிறது. இது ஆங்கிலப் பெயர்களிலுள்ள ஒரு குறைபாட்டையே குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஆயிரத்தின் ஐந்தாவது அடுக்கு நான்குக்கு நிகரான quad என்ற முன்னொட்டால் quadrillion எனப்படுகிறது. இந்த இயைபின்மையால் எண்களைத் தழிழுக்கும் ஆங்கிலத்துக்கும் இடையே மொழிபெயர்க்கும்போது நாம் கவனமாகத்தான் இருக்கவேண்டும். ஆங்கிலத்தில் போலவே நாமும் ஐந்தாவது அடுக்கை நான்மடியாயிரம் என்று சொல்லும் சாத்தியம் செறுப்புக்குத் தகுந்தாற்போல் காலை வெட்டிக்கொள்ளும் சாத்தியத்தைப் போன்றது. தற்காலத்தில் அறிவியல் போன்ற துறைகளில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துவது உண்மைதான். ஆனால் இந்த நிலை சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்ததில்லை; இன்னும் முந்நூறு ஆண்டுகளில் இல்லாமல் போகலாம். ஆங்கிலத்தின் ஆதிக்கம் ஓரிரு நூற்றாண்டுகள் முன்பு நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளால் ஏற்பட்டது. தமிழ் மொழி அந்தக் காலக்கட்டத்துக்கு அப்பாற்பட்டது. இந்த அட்டவணையில் நான் தந்திருப்பது குற்றளவு எனப்படும் அமைப்பிலான அமெரிக்க ஆங்கிலப் பெயர்கள். அமெரிக்க ஆங்கிலத்துக்கும் பிரித்தானிய ஆங்கிலத்துக்கும் இடையேயும் எண்களின் பெயரில் ஓர் இயைபின்மை இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
A discrepancy between the Tamil words and the English words is clearly visible in the table. This indicates a deficiency in the English names. For example, the fifth power of thousand is written quadrillion using the prefix quad- corresponding to four. Due to this discrepancy, we must be careful while translating numbers between Tamil and English. The possibility of calling the fifth power of thosand நான்மடியாயிரம் just as in English is like the possibility of trimming our feet to fit the shoe. It is true that English dominates science and other areas at present. But this situation did not prevail about three hundred years ago; it may not prevail three hundred years since. The dominance of English arose from historical events taking place a century or two ago. Tamil is beyond this time frame. What I have given in the table are the American names in a system called short scale. It is noteworthy that there is a discrepancy between American English and Brittish English regarding the names of large numbers.
பெரிய எண்களின் பெயர்களை அடுத்து, ஆயிரத்தின் அடுக்குகளின் மெட்டிரிக முன்னொட்டுகளைக் காண்போம். அவ்வாறான ஆங்கில முன்னொட்டுகளையும் அவற்றுக்குத் தமிழில் நான் முன்வைப்பனவற்றையும் அவற்றின் திட்டமாக்கிய அடையாளங்களையும் அட்டவணை 2 காட்டுகிறது.
After the names of large numbers, let us see the metric prefixes for the powers of thousand. The English names of such prefixes, my proposals for the Tamil versions, and their standard symbols are shown in அட்டவணை 2.
இயற்பியலில் பயன்படும் அளவைகளின் அலகுகளும் அவற்றின் அடையாளங்களும் பன்னாட்டு அலகமைப்பு (பவ) என்ற ஒருங்கமைப்பால் திட்டமாக்கப் பட்டுள்ளன. நாமும் அவற்றின் திட்டவட்டமான சமானிகளைப் பயன்படுத்தவேண்டும். அலகுகளின் பெயர்களை அட்டவணை 3 காட்டுகிறது. இந்த அட்டவணையில் பவ திட்டமாக்கலில் சொல்லப்பட்ட அடிப்படை அலகுகளும் வருவித்த அலகுகளும் உள்ளன. பவ திட்டமாக்கலில் இல்லாத சில அலகுகளும் அட்டவணையின் இறுதிப் பாகத்தில் உள்ளன.
The units of measurements used in physics and their symbols have been standardized by an organization called System International de Units (SI). We too should use their definite equivalents. அட்டவணை 3 shows the unit names. The table contains the base units and derived units specified in the SI standard. Some units not in the SI standard are also shown towards the end of the table.
எண் | தமிழ் முன்னொட்டு | English prefix | அடையாளம் |
---|---|---|---|
10 | தெக்கா | deca | da |
100 | எட்டா | hecta | h |
1000 | கிலோ | kilo | k |
106 | மெகா | mega | M |
109 | கிகா | giga | G |
1012 | தெரா | tera | T |
1015 | பேட்டா | peta | P |
1018 | எச்சா | exa | E |
1021 | சேட்டா | zeta | Z |
1024 | யோட்டா | yotta | Y |
0.1 | தெசி | deci | d |
0.01 | சென்றி | centi | c |
0.001 | மில்லி | milli | m |
10-6 | மைக்குரோ | micro | μ |
10-9 | நானோ | nano | n |
10-12 | பீக்கோ | pico | p |
10-15 | பெமுடோ | femto | f |
10-18 | அட்டோ | atto | a |
10-21 | செட்டோ | zepto | z |
10-24 | யோட்டோ | yocto | y |
அட்டவணை 2 ஆயிரத்தின் அடுக்குகளுக்கான மெட்டிரிக முன்னொட்டுகளும் அடையாளங்களும்
முன்னொட்டுகளையும் அலகுகளின் பெயர்களையும் தமிழில் எழுதும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. ஆனால் அவற்றுக்கான அடையாளங்கள் பன்னாட்டு அலகமைப்பால் நிர்ணயிக்கப் பட்டவை. அவற்றைக் கொடுக்கப்பட்ட உரோமானிய அல்லது கிரேக்கக் குறியீடுகளாலேயே எழுதவேண்டும். தமிழில் சிறு எண்களை ௧, ௨, ௩, ௪, ௫. ௬. ௭. ௮, ௯ என்றெல்லாம் எழுதாமல் 1, 2, 3, 4, … என்று உரோமானியக் குறியீடுகளால் எழுதி ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, … என்று வாசிப்பதுபோலவே, அளவுகளை 10 கிமீ, 4 நொ, 7 கி என்று எழுதாமல் 10 km, 4 s, 7 g என்று எழுதி, பத்து கிலோமீட்டர், நான்கு நொடிகள், ஏழு கிராம் என்று வாசிக்கவேண்டும். அதாவது, இங்கு m என்பது மீட்டரைக் குறிக்கும் ஓர் உரோமானிய அடையாளம்; அதை எம் என்ற ஆங்கில எழுத்தாக எண்ணுவது தவறு.
We have the freedom of writing the number prefixes and unit names in Tamil. Howerver, their symbols are determined by the System International de Units. We must write them in the given Roman or Greek notation. Just like we write small letters in Tamil not as ௧, ௨, ௩, ௪, ௫. ௬. ௭. ௮, ௯ but using Roman symbols as 1, 2, 3, 4, … and read them as ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, …, we should write measurements not as 10 கிமீ, 4 நொ, 7 கி but as 10 km, 4 s, 7 g and read them as பத்து கிலோமீட்டர், நான்கு நொடிகள், ஏழு கிராம். Here m is a Roman symbol denoting meter; it is incorrect to think of it as the English letter em.
Measurement | அளவு | Unit | அலகு | அடையாளம் |
---|---|---|---|---|
length | நீளம் | meter | மீட்டர் | m |
mass | நிறை | kilogram | கிலோகிராம் | kg |
time | நேரம் | second | நொடி | s |
electric current | மின்னோட்டம் | ampere | ஆம்பியர் | A |
temperature | வெப்பநிலை | degree Kelvin | பாகை கெல்வின் | K |
amount of substance | பொளுளளவு | mole | மோல் | mol |
light intensity | ஒளிச்செரிவு | candela | காண்டலா | cd |
angle | கோணம் | radian | ஆரையன் | rad |
solid angle | திண்மக் கோணம் | steradian | திண்மாரையன் | sr |
frequency | அலைவெண் | hertz | எர்சு | Hz |
force | விசை | newton | நியூட்டன் | N |
pressure | அழுத்தம் | pascal | பாசுக்கல் | Pa |
energy | ஆற்றல் | joule | சூல் | J |
power | திறன் | watt | வாட்டு | W |
electric charge | மின்னூட்டம் | coulomb | கூலும் | C |
electric field potential | மின்புல ஆற்றநிலை | volt | வோல்டு | V |
electric capacitance | மின்தேக்கம் | farad | பாரடு | F |
electric resistance | மின் தடையம் | ohm | ஓம் | Ω |
electric conductance | மின் கடத்தம் | siemens | சீமன்சு | s |
magnetic flux | காந்தப் பாயம் | weber | வெபர் | Wb |
magnetic flux density | காந்தப் பாய அடர்வு | tesla | தெசுலா | T |
indunctance | தூண்டல் | henry | என்ரி | H |
temperature | வெப்பநிலை | degree celcius | பாகை செல்சியசு | ºC |
luminous flux | ஒளிப் பாயம் | lumen | யூமன் | lm |
illuminance | ஒப்பு ஒளிப்பாயம் | lux | யூசு | lx |
radioactivity | கதிரியக்கம் | becquerel | பெக்கரல் | Bq |
absorbed dose | உட்கவர் அளவு | gray | கிரே | Gy |
dose equivalent | உட்கவர் சமானி | sievert | சிவர்டு | Sy |
catalytic activity | வினையூக்களவு | katal | கறல் | kat |
length | நீளம் | angstrom | ஆங்கிதம் | Å |
length | நீளம் | centimeter | சென்றிமீட்டர் | cm |
volume | பருமன் | cubic centimeter | கன சென்றிமீட்டர் | cc |
mass | நிறை | gram | கிராம் | g |
digital information | எண்ணியல் தகவல் | bit | இணு | b |
digital information | எண்ணியல் தகவல் | byte | எணு | B |
அட்டவணை 3 அளவைகளின் அலகுகளும் அடையாளங்களும்
ஆயிரத்தின் அடுக்குகளின் பெயர்களையும் அளவைகளின் அலகுகளின் பெயர்களையும் தமிழில் எழுதி, அவற்றின் அடையாளங்களை உரோமானிய அல்லது கிரேக்கக் குறியீடுகளிலேயே எழுதுவதுபோலவே, வேதியியலில் தனிமங்களின் பெயர்களைத் தமிழில் எழுதி, அவற்றின் அடையாளங்களை உரோமானியக் குறியீடுகளில் எழுதவேண்டும். இந்த முறை சீன மொழியிலும் கடைப்பிடிக்கப் படுவதைப் படம் 1 காட்டுகிறது. தமிழில் வெகுகாலமாக வழங்கிவரும் தங்கம், வெள்ளி, இரும்பு, தாமிரம், துத்தநாகம், கந்தகம் போன்ற பெயர்களை அவ்வாறே எடுத்துக்கொண்டேன். Hydrogen, helium, oxygen, nitrogen போன்ற எளிதாகக் காரணம் தோன்றும் பெயர்களைத் தமிழிலும் காரணப் பெயர்களாக்கினேன். Hydrogen நீரிலிருந்து எழுவதால் நீரியம் ஆனது. Helium கதிரவனிலிருந்து வருவதால் கதிரவம் ஆனது. Biology உயிரியல் ஆகிவிட்டதால், Oxygen என்ற தனிமத்துக்கு உயிரியம் என்ற சொல்லைப் பயன்படுத்தினால், bio-, oxy- ஆகிய இரண்டு முன்னொட்டுகளும் உயிரிய- என்றாகிவிடும். ஆகவே தனிமத்துக்கு மூச்சியம் என்று பெயரிட்டேன். அப்படியானால், oxidation மூச்சியமேற்றம் என்றும் reduction மூச்சியமிறக்கம் என்றும் ஆகின்றன. மற்றத் தனிமங்களின் பெயர்களைத் தமிழியலாக்கினேன். தனிமப் பெயர்களின் முழுப் பட்டியலை அட்டவணை 4 தருகிறது.
Just as we write the names of the powers of thousands and units of measurements in Tamil and their symbols in Roman or Greek notation, we should write the names of chemical elements in Tamil and their symbols in Roman notation. படம் 1 shows how this method is used in the Chinese language. I have retained established Tamil names such as தங்கம், வெள்ளி, இரும்பு, தாமிரம், துத்தநாகம், and கந்தகம். I translated names such as hodrogen, helium, oxygen, and nitrogen whose etymology is clear. Since hydrogen arises from water it became நீரியம். Since helium arises from the sun, it became கதிரவம். Since biology is உயிரியல், using உயிரியம் for oxygen would cause the prefixes bio- and oxy- to be mapped to உயிரிய-. Hence I named the element மூச்சியம். Then oxidation becomes மூச்சியமேற்றம் and reduction becomes மூச்சியமிறக்கம். I Tamilized the names of other elements. The full list of element names is given in அட்டவணை 4.
அணு எண் | Name | பெயர் | அடையாளம் |
---|---|---|---|
1 | Hydrogen | நீரியம் | H |
2 | Helium | கதிரவம் | He |
3 | Lithium | இலித்தியம் | Li |
4 | Beryllium | பெரிலியம் | Be |
5 | Boron | போரான் | B |
6 | Carbon | கரிமம் | C |
7 | Nitrogen | உப்பியம் | N |
8 | Oxygen | மூச்சியம் | O |
9 | Fluorine | புளோரின் | F |
10 | Neon | நியான் | Ne |
11 | Sodium | சோடியம் | Na |
12 | Magnesium | மகனீசியம் | Mg |
13 | Aluminum | அலுமினம் | Al |
14 | Silicon | சிலிக்கான் | Si |
15 | Phosphorus | பாசுவரம் | P |
16 | Sulfur | கந்தகம் | S |
17 | Chlorine | குளோரின் | Cl |
18 | Argon | ஆர்கான் | Ar |
19 | Potassium | பொட்டாசியம் | K |
20 | Calcium | கால்சியம் | Ca |
21 | Scandium | காந்தியம் | Sc |
22 | Titanium | தைத்தேனியம் | Tl |
23 | Vanadium | வனேடியம் | V |
24 | Chromium | குரோமியம் | Cr |
25 | Manganese | மாங்கனீசு | Mn |
26 | Iron | இரும்பு | Fe |
27 | Cobalt | கோபாற்று | Co |
28 | Nickel | நிக்கல் | Ni |
29 | Copper | தாமிரம் | Cu |
30 | Zinc | துத்தநாகம் | Zn |
31 | Gallium | காலியம் | Ga |
32 | Germanium | செருமேனியம் | Ge |
33 | Arsenic | ஆர்சனிக்கு | As |
34 | Selenium | செலினியம் | Se |
35 | Bromine | புரோமின் | Br |
36 | Krypton | கிரிட்டான் | Kr |
37 | Rubidium | உருபிடியம் | Rb |
38 | Strontium | துரந்தியம் | Sr |
39 | Ytttrium | இத்திரியம் | Y |
40 | Zirconium | சிருக்கோனியம் | Zr |
41 | Niobium | நியோபியம் | Nb |
42 | Molybdenum | மாலித்தினம் | Mo |
43 | Technetium | தெக்கினியம் | Tc |
44 | Ruthenium | உருத்தினியம் | Ru |
45 | Rhodium | உரோடியம் | Rh |
46 | Palladium | பல்லேடியம் | Pd |
47 | Silver | வெள்ளி | Ag |
48 | Cadmium | கடமியம் | Cd |
49 | Indium | இண்டியம் | In |
50 | Tin | தகரம் | Sn |
51 | Antimony | ஆந்திமனி | Sb |
52 | Tellurium | தெலுரியம் | Te |
53 | Iodine | அயோடின் | I |
54 | Xenon | சீனான் | Xe |
55 | Cesium | சீசியம் | Cs |
56 | Barium | பேரியம் | Ba |
57 | Lanthanum | இலந்தனம் | La |
58 | Cerium | சீரியம் | Ce |
59 | Praseodymium | பிரசோடிமியம் | Pr |
60 | Neodymium | நியோடிமியம் | Nd |
61 | Promethium | புரோமிதியம் | Pm |
62 | Samarium | சமேரியம் | Sm |
63 | Europium | ஐரோப்பியம் | Eu |
64 | Gadolinium | கடோலினியம் | Gd |
65 | Terbium | தேபியம் | Tb |
66 | Dysprosium | திப்புரோசியம் | Dy |
67 | Holmium | ஓலுமியம் | Ho |
68 | Erbium | எர்பியம் | Er |
69 | Thulium | துலியம் | Tm |
70 | Ytterbium | இத்தேபியம் | Yb |
71 | Lutetium | நுடீசியம் | Lu |
72 | Hafnium | ஆபினியம் | Hf |
73 | Tantalum | தாந்தலம் | Ta |
74 | Tungsten | துங்கதன் | W |
75 | Rhenium | இரீனியம் | Re |
76 | Osmium | ஆசுமியம் | Os |
77 | Iridium | இரிடியம் | Ir |
78 | Platinum | பிளாட்டினம் | Pt |
79 | Gold | தங்கம் | Au |
80 | Mercury | பாதரசம் | Hg |
81 | Thallium | தாலியம் | Tl |
82 | Lead | ஈயம் | Pb |
83 | Bismuth | பிசுமத்து | Bi |
84 | Polonium | பொலோனியம் | Po |
85 | Astatine | அசிதாதீன் | At |
86 | Radon | இரேடான் | Rn |
87 | Francium | பிரான்சியம் | Fr |
88 | Radium | இரேடியம் | Ra |
89 | Actinium | அட்டினியம் | Ac |
90 | Thorium | தோரியம் | Th |
91 | Protactinium | புரோட்டட்டினியம் | Pa |
92 | Uranium | யுரேனியம் | U |
93 | Neptunium | நெட்டுனியம் | Np |
94 | Plutonium | புளுட்டோனியம் | Pu |
95 | Americium | அமெரீசியம் | Am |
96 | Curium | சீரியம் | Cm |
97 | Berkelium | பெருக்கிலியம் | Kb |
98 | Californium | கலிபோர்னியம் | Cf |
99 | Einsteinium | ஐனத்தியம் | Es |
100 | Fermium | பெர்மியம் | Fm |
101 | Mendelevium | மெஞ்சலீவியம் | Md |
102 | Nobelium | நோபெலியம் | No |
103 | Lawrencium | இலாரன்சியம் | Lr |
104 | Rutherfordium | இரதர்பர்டியம் | Rf |
105 | Dubnium | அடபினியம் | Db |
106 | Seaborgium | சிபர்கியம் | Sg |
107 | Bohrium | போரியம் | Bh |
108 | Hassium | காசியம் | Hs |
109 | Meitnerium | மெயினரியம் | Mt |
110 | Darmstadtium | ஆருமசுடியம் | Ds |
111 | Roentgenium | உரோகனியம் | Rg |
112 | Copernicium | கோப்பர்நிசியம் | Cn |
113 | Ununtrium | ஒன்றொன்றுமூன்றியம் | Uut |
114 | Flerovium | பிளிரோவியம் | Fl |
115 | Ununpentium | ஒன்றொன்றைந்தியம் | Uup |
116 | Livermorium | உலிவமோரியம் | Lv |
117 | Ununseptium | ஒன்றொன்றேழியம் | Uus |
118 | Ununoctium | ஒன்றொன்றெட்டியம் | Uuo |
அட்டவணை 4 வேதித் தனிமங்களின் பெயர்களும் அடையாளங்களும்
கரிம வேதிச் சேர்மங்களைப் பெயரிடுவதற்கான விதிமுறைகளைப் பன்னாட்டு தூய மற்றும் பயன்பாட்டு வேதியியலார் (பதூபவே) ஒன்றியம் செந்தரமாக்கியிருக்கிறது. ஒவ்வொரு சேர்மத்துக்கும் ஓர் ஒருத்துவமான தமிழ்ப் பெயர் வரும்படி இவ்விதிகளைத் நாம் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, தெவிட்டிய நீரியக்கரிமங்களின் பெயர்கள் கரிம அணுக்களின் எண்ணிக்கை தோன்றும் ஒரு முன்னொட்டில் தொடங்கி –ஏன் என்ற பின்னொட்டில் முடியவேண்டும் என்று பதூபவே விதிக்கிறது. ஆனால் முன்னொட்டுகளையும் பின்னொட்டுகளையும் வேண்டிய மொழியில் எழுதிக்கொள்ளும் சுதந்திரத்தை அவ்விதிகள் மறுக்கவில்லை. கரிமச் சேர்மங்களின் பெயர்களைத் தமிழில் அமைமுறையில் பெயரிடுவதற்கான சொற்பகுதிகளை அட்டவணை 5 காட்டுகிறது.
International Union of Pure and Applied Chemistry (IUPAC) has standardized the rules for the nomenclature of organic chemical compounds. We can translate these rules into Tamil so that each compound has a unique name in Tamil. For example, IUPAC rules that the names of saturated hydrocarbons should start with a prefix showing the number of carbon atoms and end with the suffix –ane. But it does not deny the freedom of writing those prefixes and suffixes in the required language. அட்டவணை 5 shows parts of words to be used for naming organic compounds systematically.
தமிழ் எண்கள் அனைத்தும் குற்றியலுகரத்திலேயே முடிகின்றன. இந்த உகரத்தை நீக்கி அகரம் சேர்ப்பது கரிம எண்களின் எண்ணிக்கைக்கான முன்னொட்டைப் பெறுவதன் பொது விதி எனவும் அந்த முன்னொட்டுகளுடன் -ஐல் சேர்ப்பது ஆல்க்கைல் தொகுதிகளின் பெயர்களைப் பெறுவதன் பொதுவிதி எனவும் நான் முன்மொழிகிறேன். இதன்படி பத்துக் கரிம அணுக்களுடைய கோர்வையைக் குறிக்கும் முன்னொட்டு பத்த- எனவும், அவ்வாறான தெவிட்டிய கோர்வை பத்தவேன் எனவும், அவ்வாறான ஆல்க்கைல் தொகுதி பத்தவைல் எனவும் ஆகின்றன. இதைப்போலவே 23 கரிம எண்கள் உள்ள கட்டமைப்புக் கூறுகளுக்கு முறையே இருபத்துமூன்ற-, இருபத்துமூன்றவேன், இருபத்துமூன்றவைல் எனப் பெறுகிறோம்.
All numbers in Tamil end in a குற்றியலுகரம். I propose that removing this உகரம் and adding an அகரம் is the general rule to get the prefix showing the number of carbon atoms and that adding an –ஐல் to that prefix is the general tule to get the names of alkyl groups. According to this, the prefix for a chain with ten carbon atoms becomes பத்த-, such saturated chain becomes பத்தவேன், and such alkyl group becomes பத்தவைல். Similarly we get இருபத்துமூன்ற-, இருபத்துமூன்றவேன், and இருபத்துமூன்றவைல் respectively for the structural elements with 23 carbon atoms.
கட்டமைப்புக் கூறு | English affix | தமிழ் ஒட்டுகள் | |
---|---|---|---|
கரிம அணு எண்ணிக்கை | Meth- | மீத்து- | |
Eth- | ஈத்து- | ||
Prop- | புரோப்பு- | ||
Buta- | நான்க- | ||
Penta- | ஐந்த- | ||
Hexa- | ஆற- | ||
Hepta- | ஏழ- | ||
தெவிட்டிய நீரியக்கரிமம் | -ane | -ஏன் | |
இரண்டைப் பிணைப்பு | -ene | -ஈன் | |
மும்மப் பிணைப்பு | -yne | -ஐன் | |
ஆல்க்கைல் | -yl | -ஐல் | |
ஆல்க்கீனைல் | -enyl | -ஈனைல் | |
ஆல்க்கைனைல் | -ynyl | -ஐனைல் | |
ஆல்ககால் | -ol | -ஆல் | |
hydroxy- | நீர்மூச்சிய- | ||
குளோரைடு | chloro- | குளோரோ- | |
புளோரைடு | fluoro- | புளோரோ- | |
புரோமைடு | bromo- | புரோமோ- | |
ஐயோடைடு | iodo- | ஐயோடோ- | |
ஆல்டிகைடு | -al | -அல் | |
-carbaldehyde | -கரிமால்டிகைடு | ||
-benzaldehyde | -பென்சால்டிகைடு | ||
கீற்றோன் | -one | -ஓன் | |
oxo- | மூச்சியோ- | ||
கரிமமிலம் | -oic acid | -ஆயிக அமிலம் | |
carboxyl- | கரிமமில- | ||
இரட்டைக் கரிமமிலம் | -dioic acid | -ஈராயிக அமிலம் | |
dicarboxyl- | இருகரிமமில- | ||
ஈத்தர் | alkoxy- | ஆல்க்கமூச்சிய- | |
கரிமமிலேட்டு | -oate | -ஓயேட்டு | |
அமீன் | -amine | -அமீன் | |
amino- | அமினோ- | ||
அமைடு | -amide | -அமைடு | |
carbamoyl- | கரிமமாயில்- | ||
amido- | அமிடோ- | ||
சயனலி | -nitrile | -சயனலி | |
cyano- | சயனோ- | ||
இரட்டைச் சயனலி | -dinitrile | -இருசயனலி | |
குறையமில உப்பாக்கைடு | -oyl | -ஆயில் | |
சுழல் நீரியக்கரிமம் | cyclo- | சுழல்- | |
அரோமாட்டியம் | phenyl- | பினைல்- | |
பக்க மாற்றியம் | Z- | ஒ- (ஒரே) | |
E- | ம- (மறு) | ||
வெளியிட மாற்றியம் | R- | வ- (வலது) | |
S- | இ- (இடது) |
அட்டவணை 5 கரிமத் தனிமங்களின் பெயரிடுமுறைக்கான சொற்பகுதிகள்
இம்முறையைப் பின்பற்றுவதன்மூலம் தமிழ் ஆங்கிலப் பெயர்களிடையேயும், பெயர்களுக்கும் கட்டமைப்புகளுக்கும் இடையேயும் ஒன்றுக்கொன்றான தொடர்பைப் பெறுகிறோம். இம்முறையில் எழுதப்பட்ட பெயர்கள் சிலவற்றை அட்டவணை 6 காட்டுகிறது. அட்டவணையிலுள்ள மூன்றாம் எடுத்துக்காட்டில், பதிலிகள் ஆங்கிலப் பெயரில் ஆங்கில அகரவரிசையிலும், தமிழ்ப் பெயரில் தமிழ் அகரவரிசையிலும் பட்டியலிடப் படுவதை நோக்குக. இந்தத் தமிழ்ப் பெயரை வாசிக்கும்போது, இரண்டு ம ஐந்து ஈத்தைல் ஆறு புரோமோமீத்தைல் எட்ட இரண்டு ஈன் என்றோ அல்லது இரண்டு ம ஐந்தீத்தைல் ஆறு புரோமோமீத்தைல் எட்டவிரண்டீன் என்பது போன்று சில உறுப்புகளைப் புணர்ச்சி விதிகளால் சேர்த்தோ சொல்லலாம். ஆனால் முழுப்பெயரும் இடையில் வெற்றிடம் இல்லாமல் ஓர் ஒற்றைச் சொல்லாக எழுதப்படவேண்டுமென்பது பதூபவே விதி.
By following this method, we get a one-to-one correspondence between the Tamil and English names and between names and structures. அட்டவணை 6 shows some names written in this method. In the third example of the table, please note that the substituents are ordered in the English alphabetical order for the English name and in the Tamil alphabetical order for the Tamil name. While reading the Tamil name we can say either as இரண்டு ம ஐந்து ஈத்தைல் ஆறு புரோமோமீத்தைல் எட்ட இரண்டு ஈன் or with coupling some parts such as இரண்டு ம ஐந்தீத்தைல் ஆறுபுரோமோமீத்தைல் எட்டவிரண்டீன். However, it is an IUPAC rule that the complete name should be written as a single word without intervening space.
வரிசை எண் | கட்டமைப்பு | English name | தமிழ்ப் பெயர் |
---|---|---|---|
1 | ![]() |
octane | எட்டவேன் |
2 | ![]() |
ethyne | ஈத்தைன் |
3 | ![]() |
(2E)-6-(bromomethyl)-5-ethyloct-2-ene | (2ம¬)-5-ஈத்தைல்-6-(புரோமோமீத்தைல்)எட்ட-2-ஈன் |
4 | ![]() |
(3R)-3-methylhepta-1,5-diyne | (3வ)-3-மீத்தைல்ஏழ-1,5-ஈரைன் |
5 | ![]() |
cyclopentene | சுழலைந்தவீன் |
அட்டவணை 6 பதூபவே விதிகளின் படி கரிமச் சேர்மங்களின் பெயர்கள்
உயிரியலில் வாழ்வனவற்றைத் தாவரரசு, விலங்கரசு போன்ற பல பேரரசுகளாகப் பிரிப்பதில் தொடங்கி ஒவ்வோர் இனத்தின் வகையையும் வடிவத்தையும் குறிப்பது வரையான ஒரு படிவரிசைப் பாகுபாட்டு முறை உள்ளது. இந்தப் படிவரிசையின் ஒவ்வொரு தரநிலையிலும் உள்ள பாகுபடுத்திக்கும் ஒவ்வோர் இனத்துக்கும் பெயரிடுவதற்கான ஓர் அமைமுறையான வழியும் உள்ளது. அதே படிவரிசை நிலைக்குமாறும் ஆங்கிலப் பெயருக்கும் தமிழ்ப் பெயருக்கும் ஓர் ஓன்றுக்கொன்று தொடர்பு இருக்குமாறும் ஓர் அமைமுறையை நாம் தமிழிலும் பின்பற்ற வேண்டும். அவ்வாறான தொடர்பை ஏற்படுத்துவதற்காகப் பாகுபாட்டியலில் பயன்படும் சில சொற்களுக்கும் ஒட்டுகளுக்கும் நிகரான தமிழ்ப் பகுதிகளை அட்டவணை 7 காட்டுகிறது. ஒவ்வொரு தரநிலையிலும் ஒரு தொகுதியின் பெயர் அஃறிணைப் பன்மைச் சொல்லாக இருக்கவேண்டும் என்ற விதியைப் பின்பற்றுகிறோம்.
In biology, there is a hierarchical method of classifying life starting from separating it into kingdoms such as plantae and animalia down to specifying variety and form of each species. There is also a systematic way of naming the taxon at each rank of this hierarchy and each species. We must follow a systematics in Tamil such that the same hierarchy is preserved and there is a one-to-one rlation between the English name and Tamil name. In order to make such a relation அட்டவணை 7 shows the Tamil parts corresponding to some words and affixes used in taxonomy. We follow the rule that the name of a group should be diminutive plural at every rank.
English | தமிழ் | English | தமிழ் |
---|---|---|---|
taxon | பாகுபடுத்தி | -mycota | -பூஞ்சன |
domain | களம் | -phytina | -தாவரின |
subkingdom | உட்பேரரசு | -phycotina | -ஆல்கின |
kingdom | பேரரசு | -mycotina | -பூஞ்சின |
phylum | பிரிவு (வில) | -opsida | -தாவரவை |
division | பிரிவு (தாவர) | -phyceae | -ஆல்கவை |
class | வகுப்பு | -mycetes | -பூஞ்சவை |
order | முறைமை | -idea | -தாவரிவை |
infraorder | கீழ்முறைமை | -phycidae | -ஆல்கிவை |
superfamily | மிகைக்குடும்பம் | -mycetidae | -பூஞ்சிவை |
family | குடும்பம் | -ales | -ஐகள் |
subfamily | உட்குடும்பம் | -ineae | -ஐகிள் |
infrafamily | கீழ்க்குடும்பம் | -aceae | -அனையன |
tribe | கிளையம் | -oideae | -அனையின |
subtribe | உட்கிளையம் | -eae | -அங்கள் |
genus | துறை | -inae | -இங்கள் |
subgenus | உட்டுறை | -phyte | -தாவரம் |
section | பகுதி | -coccus | -மணியம் |
series | தொடர் | -cocci | -மணியன |
species | இனம் | -bacillus | -குச்சியம் |
subspecies | உள்ளினம் | -bacilli | -குச்சியன |
infraspecies | கீழினம் | animalia | விலங்கரசு |
variety | வகை | plantae | தாவரரசு |
subvariety | உள்வகை | chromista | குரோமரசு |
form | வடிவம் | fungi | பூஞ்சரசு |
subform | உள்வடிவம் | bacteria | பாட்டரசு |
-phyta | -தாவரன | protozoa | புரோட்டரசு |
-phycota | -ஆல்கன | archaea | ஆர்க்கரசு |
அட்டவணை 7 பாகுபாட்டியலில் வழங்கும் சில சொற்பகுதிகள்
எதிர்கால அலுவல்களும் சுருக்கவுரையும்
Future work and summary
முன்பு சொன்னபடி பத்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையான பாடப்புத்தகங்களிலிருந்து கலைச் சொற்களைத் திரட்டி ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குமாக இரண்டு பட்டியல்களாகக் கீழே தருகிறேன். இதைச் செய்து முடிப்பதற்குச் சுமார் இரண்டு ஆளாண்டுகள் தேவையானது என்று மதிப்பிடுகிறேன்; ஆயினும் நான் பகுதி நேரமே இதில் ஈடுபட்டதால் மூன்று ஆண்டுக் காலம் ஆனது. இந்தப் பட்டியல்கள் சுமார் பதிநான்காயிரம் பதிவுகள் அடங்கியவை. உயர் அறிவியலில் மேலும் பதினாயிரக் கணக்கான சொற்கள் இருக்கலாம். எதிர்காலத்தில் அவற்றையும் தொகுத்துத் தமிழாக்கும் வேலை இருக்கிறது. கரிமச் சேர்மங்களைப் பெயரிடும் முறைக்கு பதூபவே ஒன்றியம் இயற்றிய விதிகளுக்கான மேலும் விரிவான தமிழாக்கத்தைச் செய்யும் வேலையும் இருக்கிறது. மேலும் கனிமச் சேர்மங்கள், புரதங்கள், ஊக்கிப் புரதங்கள் போன்றவற்றின் திட்டமாக்கிய பெயரிடுமுறைப் படி தமிழ்ப்பெயர்கள் அல்லது தமிழியலாக்கிய பெயர்களை உண்டாக்கும் வேலையும் இருக்கிறது. உலகிலுள்ள சுமார் 1.7 இருமடியாயிரம் இனங்களின் உயிரியல் பெயர்களையும் அவற்றின் படிவரிசைத் தரநிலையின் பெயர்களையும் தமிழெழுதும் வேலையும் இருக்கிறது. இந்த மாபெரும் உயிரியல் பணியைச் செய்ய வெகுகாலம் ஆகலாம். பாகுபாட்டுப் படிவரிசையை மேலிருந்து கீழ் அதாவது வேரிலிருந்து இலைகளை நோக்கி நடக்கையிடுவதன் மூலம் இடைநிலை முடிவுகளை தன்னியைபான நிலைகளில் வைத்திருக்கலாம். இந்த நூல் ஒரு முதற்படிதான்.
As mentioned before, I collected technical words from tenth through twelfth standards textbooks and made two lists one from English to Tamil and another from Tamil to English. I estimate that the completion of this work took about two person years, although I took about three years working part-time. The lists contain about fourteen thousand entries. There may be tens of thousands of more words in advanced science. The job of translating them remains for the future. The IUPAC rules for organic nomenclature needs to be translated in more detail. Further, the Tamil or tamilized names for inorganic compuonds, proteins, and enzymes need to be created in accordance with the standardized nomenclature. The task remains to write in Tamil the names of about 1.7 million species on earth and the names of the ranks in their hierarchical arrangement. It may take a long time to complete this great biology task. By traversing the taxonomic hierarchy from top to bottom, that is from root to the leaves, the intermediate results can be kept in selfconsistent states. This book is only a first step.
இந்த நூலின் நோக்கம் அறிவியல் இலக்கியங்களைச் செந்தமிழில் எழுதுவது சாத்தியம் என்று காட்டுவதும் அதற்குத் தேவையான சொல்லாக்கப் பணியைத் தொடங்கி வைப்பதுமாகும். தமிழ்நாட்டின் பாடநூல்கள் எனக்குக் கிடைத்ததால் அவை இப்பணிக்கு எனக்குத் தேவையான ஒரு வளமாகப் பயன்பட்டன. தமிழ் பேசும் எந்த நாட்டிலும் நிலவும் தற்காலக் கல்விமுறையைத் திறனாய்வதோ, தமிழில் அறிவியல் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோ இந்நூலின் நோக்கமன்று. தமிழ்வழிக் கல்வியின் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரப் பின்விளைவுகளை அலசுவதும் இந்நூலின் நோக்கெல்லைக்கு அப்பாற்பட்டது. இந்த நூலின் உள்ளடக்கம் ஒரு முன்வைப்பே. இதை ஏற்பதும் ஏற்காததும் தமிழ் பேசும் கற்றறிஞர்களின் விருப்பம். செந்தமிழில் அறிவியல் எழுதப்படாததற்கு அவ்வாறு எழுத இயலாது என்பது ஒரு காரணமாக இருக்கவேண்டாம்.
The purpose of this book is to show that it is possible to write scientific literature in Tamil and to begin the task of creating the necessary vocabulary. Since the textbooks of Tamilnadu were available to me they were useful as the resource I need. It is not the purpose of this book to criticise the educational method prevailing in any Tamil speaking nation; nor it is to emphasize science education in Tamil. Analyzing the political, social, and economical consequences of Tamil medium education is also beyond the scope of this book. The contents of this book is only a proposal. It is up to the Tamil speaking scholars to accept it or not. The reason for not writing science in Tamil need not be that it cannot be done.
சுருக்கமாக, அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் ஆங்கிலத்தில் வழங்கும் கலைச்சொற்கள் ஒவ்வொன்றுக்கும் இணையாக ஒரு துல்லியமான, திட்டவட்டமான, ஒருத்துவத் தமிழ்க் கலைச்சொல்லைத் தரும் முழுமையான, ஒன்றுக்கொன்றான, தன்னியைபான பட்டியலை முன்வைப்பதன் முதற்படி இந்நூல்.
அதுதான் நான் செய்ய விரும்பியது. ஆனால் மனித முயற்சிகளில் பிழைகள் நேர்வது இயல்பு. அப்பிழைகளைச் சுட்டிக்காட்டுவதற்கும், வேறெந்தப் பின்னூட்டங்களைத் தருவதற்கும் jkottalam@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள். நன்றி.
In summary, this work is the first step in proposing a complete, one-to-one, and self-consistent list containing a precise, definite, and unique Tamil technical word for a given English technical word in science and technology.
That was my intention. But being human I must have made mistakes. Please write to jkottalam@gmail.com to point out the mistakes and to provide any other feedback. Thank you.
The following abbreviations are used in the word lists.
Abbreviation | Meaning |
---|---|
n | noun |
v | verb |
vt | transitive verb |
vi | intransitive verb |
adj | adjective |
aka | also known as |
brit | Brittish English |
colloq | colloquial |
opp | as opposed to |
பெ | பெயர்ச்சொல் |
வி | வினைச்சொல் |
பெய | பெயரடைச்சொல் |
அட்டவணை 8 சொற்பட்டியல்களில் பயன்படும் குறுங்குறிகள்